மின் மோட்டார்களைப் பொருத்தி குடிநீரினை உறிஞ்சினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டரீதியான கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார்களைப் பொருத்தி நீரினை உறிஞ்சினால், மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாகக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.
பிரியங்கா எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தேவையான குடிநீரானது, மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து நீர் உறிஞ்சு குழாய்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பெறப்படும் நீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாகச் சுழற்சி அடிப்படையில் நகர் முழுவதும் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வரும் நிலையிலும், மாநகராட்சி சார்பில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும், மாநகரின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில், சில இடங்களில் குடிநீர் குழாய்களில் விதிமுறைகளுக்கு மாறாக நேரடியாக மின் மோட்டார்களைப் பொருத்தி நீரினை உறிஞ்சுவது கண்டறியப்பட்டது.
இவ்வாறு சட்டவிரோதமாக நீரை உறிஞ்சுவதால், குழாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குக் குடிநீர் விநியோகம் செல்வது தடைபடுவது உறுதியானது.
மாநகராட்சி குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார்களைப் பொருத்தி நீரை உறிஞ்சுவது, மாநகராட்சி குடிநீர் உபவிதிகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும்.
எனவே, குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார்கள் பொருத்தியுள்ள கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தவறும்பட்சத்தில், நடைமுறையில் உள்ள குடிநீர் விநியோக உபவிதிகளின்படி மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பெருமளவிலான அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டரீதியான கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்