News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியீடு :

22 Sep, 2026 — 12:11 PM
தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியீடு :

தூத்துக்குடியில் அமைச்சருக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்டு விட்டு தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மாற்றி, திமுகவில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி வழங்குவதாகக் கூறி, கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மதன் ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தை ராஜா என்பவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது உறவினரும் திமுகவைச் சேர்ந்தவருமான பாரத் என்பவரை புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன் ராஜா அறிவித்தார்.

இப்பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனமுடைந்தும், குழந்தை ராஜாவின் ஆதரவாளரும் தவெக ஒன்றிய இளைஞர் அணி செயலாளருமான முத்துக்குமரன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் நேரடியாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முன்னதாக, தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்க்கு அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில் பேசியிருப்பதாவது: "கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து 26 ஆண்டுகளாக உங்களது தீவிர ரசிகனாக உங்களுடன் பயணித்து வருகிறேன்.

நீங்கள்தான் என் உலகம், என் உயிர் என்று வாழ்ந்து வருகிறேன்.

நீங்கள் கட்சித் தொடங்கியபோது தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினேன்.

இன்று நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் குளறுபடிகளைப் பார்க்கும்போது உங்களின் பெயர் தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உங்களுக்குப் பலமுறை இமெயில் அனுப்பியுள்ளேன்; நேரில் பேசவும் முயற்சித்தேன்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுகவில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கே நமது கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் நமது கட்சி திமுக கூடாரமாக மாறி வருகிறது.

உங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இங்குள்ள நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்" என்று வேதனையுடன் கூறிக்கொண்டே அவர் விஷம் அருந்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் அருந்திய தவெக நிர்வாகி முத்துக்குமரன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

6

கருத்துக்கள்