News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

எட்டயபுரத்தில் இளம்பெண்ணை பின்தொடர்ந்த விவகாரம் : த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேருக்கு வலை :

22 Sep, 2026 — 11:51 AM
எட்டயபுரத்தில் இளம்பெண்ணை பின்தொடர்ந்த விவகாரம் : த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேருக்கு வலை :

எட்டயபுரத்தில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பர் என்பவரது மகன்கள் கனகராஜ் (25), கார்த்திக் (18).

இதில் சின்னப்பர் திமுக வார்டு செயலாளராகவும், கனகராஜ் த.வெ.க.நிர்வாகியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை தினமும் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 15ஆம் தேதி, அவரது குடும்பத்தினர் கார்த்திக்கைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கனகராஜ், சின்னப்பர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மோட்சம் (48) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்டோர், இளம்பெண்ணின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எட்டயபுரம் போலீசார், கார்த்திக்கிடம் இருந்ததாக கூறப்படும் அரிவாளை பறிமுதல் செய்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேர் மீது எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மோகன் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மோகன் கோவில்பட்டி கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 9 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, இரு தரப்பினரும் அரிவாளுடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், எட்டயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6

கருத்துக்கள்