News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11510
வெள்ளி:
₹ 175

“கள்ளநோட்டுகளைப் போல கள்ள புத்தகங்கள் பறிமுதல்” - அமைச்சர் ராஜ்மோகன் வேதனை

10 Nov, 2026 — 01:28 PM
“கள்ளநோட்டுகளைப் போல கள்ள புத்தகங்கள் பறிமுதல்” - அமைச்சர் ராஜ்மோகன் வேதனை

“ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போல, கள்ளநோட்டுகளை, போதைப்பொருட்களைப் பிடிப்பது போல கள்ள புத்தகங்களைப் பிடிப்பது எனக்கு வேதனையாக உள்ளது” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இன்றுடன் தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது.

இந்த ஆட்சி ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

முதல்வர் விஜய்யின் ஆட்சியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம்.

வரலாற்று சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்தில் 523 புத்தகங்களை நான் நேற்று பறிமுதல் செய்தேன்.

ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போல, கள்ளநோட்டுகளை, போதைப்பொருட்களைப் பிடிப்பது போல கள்ள புத்தகங்களை பிடிப்பது எனக்கு வேதனையாக உள்ளது.

கன்னிமாரா நூலகத்திலேயே 523 குப்பைகளை கொண்டுவந்து சேர்த்துள்ளார்கள் என்றால் இதற்கான வலைப்பின்னல் பெரியது.

பல்லாண்டுகளாக பதிப்புத்துறையில் இந்த குற்றத்தை செய்து வருகிறார்கள்.

ஒரு கமிட்டி, ஒரு நூலகம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் டிஜிட்டல் கரையானாக அவர்கள் நுழைந்துள்ளார்கள்.

இதனை நாம் இப்போது கண்டறிந்துள்ளோம்.

நூலகங்களில் இதுபோன்ற போலி புத்தகங்களை வைத்து, தமிழகத்துக்கு ஒரு சர்வதேச தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஏஐ மூலமாக போலி புத்தகங்களை உருவாக்கி தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார்கள்.

இதனை யார் செய்தார்கள் என்பதைக் கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

காலம் காலமாக பெரியார், அண்ணா, பகுத்தறிவின் பெயரை சொல்லி பெரியார் அறிவுலகத்திலேயே விபூதி அடித்துள்ளார்கள்.

வரும் டிசம்பரில் நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை வாங்குவதற்கு சிறப்புக் குழு அமைக்கப்படும்.

நூலகங்களில் இதுபோன்ற போலி புத்தகங்கள் கண்டறிந்து அதனை வெளியேற்றுவோம்.

போலி பதிப்பகங்களை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

3

கருத்துக்கள்