கடந்த செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தில் நடந்த கொடூர தீவிரவாத சதியை, தனது உயிரைப் பணயம் வைத்து இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் துணிச்சலாக முறியடித்தார்.
இந்த கோரத் தாக்குதலில் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சவுதி அரேபியாவின் தபூக் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
மகனின் நிலை தெரியாமல் தவித்த மும்பையை சேர்ந்த பெற்றோர், உடனே துபாய்க்கு விமானத்தில் பதற்றத்துடன் புறப்பட்டனர்.
அப்போது விமானத்தில் இருந்த தந்தை உபேந்திராவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ‘நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்; இன்றைக்குள் உங்கள் மகனிடம் பேச வைக்கிறேன்’ என்று ஆறுதல் கூறினார்.
அதன்பின் துபாய் ஆட்சியாளரின் தனி விமானம் மூலம் ஸ்மித் மச்சார் மீட்கப்பட்டு, அபுதாபியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மகனை நேரில் பார்த்த தந்தை உபேந்திரா, ‘அவனது காயங்கள் மிகவும் ஆழமானவை.
கடுமையான வலியில் துடிக்கிறான்.
ஆனாலும் பிற நாட்டு தலைவர்கள் பேசும்போது மன உறுதியோடு பேசுகிறான்.
தனக்கு முன் பிறர் நலனை யோசிக்கும் அவனது நற்குணமே இந்த துணிச்சலான செயலுக்கு காரணம்.
இன்னும் 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்ப முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் அதிபர் உபேந்திர மச்சார் என்பவரது ஒரே மகன் ஸ்மித் மச்சார்.
இவர் குடும்பத் தொழிலை விடுத்து, வான்வெளியில் பறக்கும் தீவிர ஆசையோடு நியூசிலாந்தில் 10 மாதங்கள் விமானப் பயிற்சி பெற்றார்.
தொடர்ந்து 26 லட்சம் ரூபாய் செலவில் லண்டனில் போயிங் ரக விமானப் பயிற்சி முடித்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் வெற்றிகரமாக விமானியாகப் பணியாற்றினார்.
பின்னர் கடந்த 2022ம் ஆண்டில் துபாயைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், தனது மனைவி சோனலுடன் அங்கு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்