20 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றிய பெண் ஒருவர், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக மருத்துவத் துறையை விட்டு விலகி பன் கடை தொடங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்தவர் டாங் மின்.
48 வயதான இவர் மகளிர் மருத்துவ நிபுணராக 1999-ம் ஆண்டு முதல் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தார்.
மருத்துவப் பணியுடன் தனியார் மருத்துவமனை நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, மருத்துவமனை நிர்வாகம், தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் தனக்கு அதிகமான பணிச்சுமையும் மன அழுத்தமும் ஏற்பட்டதாக டாங் மின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தனது மருத்துவப் பணியை விட்டுவிட்டு புதிய தொழிலைத் தொடங்க முடிவு செய்தார்.
வுஹான் நகரில் பாரம்பரிய முறையில் ஆவி வேகவைத்து தயாரிக்கப்படும் பன் வகைகளை விற்பனை செய்யும் கடையைத் தொடங்கினார்.உணவுத் துறையில் கடும் போட்டி இருந்தபோதிலும், டாங் மின்னின் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் தனது இரண்டாவது கிளையையும் அவர் தொடங்கியுள்ளார்.
தனது புதிய தொழில் குறித்து பேசிய டாங் மின், மருத்துவராக பணியாற்றியபோது வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்ததாகவும், தற்போது பன் கடையை நடத்துவது உடல் ரீதியாக சோர்வை ஏற்படுத்தினாலும் மனதளவில் தனக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.பல ஆண்டுகள் மருத்துவத் துறையில் பணியாற்றிய பிறகு, முற்றிலும் மாறுபட்ட தொழிலைத் தேர்வு செய்து அதிலும் வெற்றி பெற்றுள்ள டாங் மின்னின் வாழ்க்கை முடிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
கருத்துக்கள்