News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

காட்டாங்கொளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி வாலிபர் பலி: ஆயுதபடை காவலர் கைது

08 Sep, 2026 — 03:30 PM
காட்டாங்கொளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி வாலிபர் பலி: ஆயுதபடை காவலர் கைது

காட்டாங்கொளத்தூர் அருகே தவெக அரசில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

இந்த விபத்திற்கு காரணமான ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்.

இவரது மகன் இறையன்பு (26).

கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், காட்டாங்கொளத்தூர் பகுதியில் கோயில் திருவிழா நடந்து வருகிறது.

அந்த திருவிழாவை பார்த்து விட்டு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனது பைக்கில் இறையன்பு வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க காத்திருந்தார் இந்நிலையில், அந்த நேரத்தில் தவெக அரசில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சராக இருந்து வரும் ஜெகதீஸ்வரி, தமிழக சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அரசின் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அவரது காருக்கு முன்னால் போலீஸ் வாகனம் வந்தது.

பின்னால், அதாவது 3வதாக அமைச்சரின் உறவினர்கள் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, காட்டாங்கொளத்தூர் பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, போலீஸ் வாகனம் மற்றும் அமைச்சரின் கார் சென்று விட்டது.

இதில் 3வதாக குடும்பத்தினர் பயணம் செய்த கார் அதிவேகமாக வந்தபோது, திருவிழா பார்த்து விட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்ற இறையன்பு மீது சுமார் 12.35 மணி அளவில் பயங்கரமாக மோதியது.

இதில் இறையன்பு தூக்கி வீசப்பட்டு, படுகாயத்துடன் துடிதுடித்து கொண்டிருந்தார்.

உடனே விபத்தை ஏற்படுத்திய கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமைச்சரின் காரும் நிறுத்தப்பட்டது.

அதில் இருந்து அமைச்சர் கீழே இறங்கி வந்து பார்த்தார்.

அப்போது, இரு சக்கர வாகனம் உருக்குலைந்து கிடந்தது.

காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்தும் வாலிபரை தனது காரில் ஏற்றிச் செல்லாமல், அப்படியே விட்டு விட்டு சென்னை புறப்பட்டுச் சென்று விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இறையன்புவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கபெருமாள்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து மறைவான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

எந்த இடத்தில் என்று போலீசார் கூற மறுத்து விட்டனர்.

இறந்த இறையன்புவின் பைக்கை, கூடுவாஞ்சேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து இறையன்புவின் தந்தை சிவக்குமார், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிந்து காரை ஓட்டி வந்த ஆயுதப்படை காவலர் சின்ன அக்னி என்பவரை கைது செய்தனர்.

இவர், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பாதுகவாலர்.

விபத்தை ஏற்படுத்திய கார், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமைச்சருக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப் பட்ட ஆயுதப்படை காவலர், அமைச்சரின் தனிப்பட்ட காரை ஓட்டி வந்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்த சம்பவத்தால் இறந்த இறையன்புவின் குடுபம்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, சுமார் 10 நிமிடம் மட்டுமே இருந்தார்.

போலீசார் கூட வரவில்லை.

அதற்குள் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு என்ன ஆனது என அவரது நிலைமையை கூட அறியாமல், அரசின் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.

இதனால் இறந்த வாலிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படியா இருப்பார்? குறைந்தபட்ச அனுதாபம்கூட கிடையாதா என சரமாரியாக கேள்விகணைகளை எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், தவெக அரசில் அமைச்சராக பதவி வகித்து வரும் ஜெகதீஸ்வரி, ஏற்கனவே விருதுநகரில் நடந்த ஒரு அரசு விழாவில், ...புரோட்டக்கால்படி பெயர் போடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கியவர்.

மேலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழில் வாசிக்கும்போது ஏற்பட்ட சில தவறுகளுக்காகவும், துணை கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியதற்காகவும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

கருத்துக்கள்