நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பத்திரமாக இன்று டெல்லி வந்தடைந்தனர்.
அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர்.
வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார்.
பின்னர் இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன்.
அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன்.
இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் இந்தியா திரும்புவதை சுமுகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் குழுவை சற்று முன் சந்தித்தேன்.
வெள்ளத்தில் சிக்கியிருந்த அவர்கள் நேபாள ராணுவத்தால் மீட்கப்பட்டு, காத்மாண்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்கள் தாயகம் திரும்ப எங்கள் தூதரகம் ஏற்பாடு செய்தது.
அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி.
அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிய நான் அவர்களைச் சந்தித்தேன்.
அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் தொடர்பு கொள்ள நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம்.
இன்னும் 315-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நாங்கள் கருதுகிறோம்.
இப்போது வந்துள்ள 21 பேர் கொண்ட குழு உட்பட, பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மிகவும் கடினமான அந்த இடத்திலிருந்து தங்களை வெளியேற்ற பெரும் முயற்சி எடுத்த நேபாள ராணுவத்திற்கு அவர்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்தனர்.
கருத்துக்கள்