News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

‘எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால்...’ - மத்திய அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை

22 Jul, 2026 — 01:18 PM
‘எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால்...’ - மத்திய அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை

அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் டெல்லிக்கு தொடர்ந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் படையெடுப்பார்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எச்சரித்துள்ளது.

மேலும் ஜூலை 20 பேரணி வெறும் ட்ரெய்லர் தான் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவளித்தார்.

அதன் வெளிப்பாடாக அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டார்.

ஆனால், 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த அவர், டெல்லி போலீசாரால் ஜூலை 18 காலை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அகற்றப்பட்டார்.

இந்நிலையில் ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் மேற்கொண்டனர்.

அப்போது, போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

அறவழியில் மேற்கொண்ட சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்தது.

நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி பேரணியை ஒடுக்கியது என்று காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதோடு, டெல்லிக்கு இளைஞர்கள் படையெடுப்பதும் அதிகரித்துள்ளது.

டெல்லி போராட்டக் களத்தில் இருந்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா இன்று ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாக சிஜேபி உருவெடுத்துள்ளது.

ஜூலை 20-ம் நடந்தது வெறும் ட்ரெய்லர் தான்.

அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி வருவார்கள்.

ஏனெனில் இந்த முறை நாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை.

அரசு உண்மையிலேயே சரியாக செயல்பட வேண்டும்.

இல்லையென்றால், இந்த நாட்டின் இளைஞர்கள் அவர்களை மிக மோசமாக எதிர்த்து தூக்கி எறிந்துவிடுவார்கள்.

நாங்கள் அமைதிவழியில் போராட மாட்டோம் என்றொரு புனைவு திரிக்கப்படுகிறது.

ஆனால் நாங்கள் அமைதி வழியில் தான் போராடுகிறோம்.

ஜூலை 20-ம் தேதி மாணவர்கள், இளைஞர்கள் அமைதி வழியில் தான் பேரணி மேற்கொண்டனர்.போலீஸார் மாணவர்களுக்கு எதிராக பலத்தை பிரயோகப்படுத்திய பின்னர் தான் குழப்பம் ஏற்பட்டது.

நாங்கள் காந்தி, அம்பேத்கர் வழியில் பயணிக்கிறோம்.

போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

ஆனால் அதற்காக நாங்கள் அஞ்சிவிடமாட்டோம்.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) என எதன் கீழும் நாங்கள் கைதை எதிர்கொள்ளத் தயார்.

சிறை என்பது எங்கள் போராட்டத்துக்கு மிகச்சிறிய விலை.

எங்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை நாங்கள் வரவேற்கிறோம்.

பாஜகவினர் ஆதரவு கொடுத்தாலும் ஏற்போம்.

ஏனெனில் இது மிகப்பெரிய இயக்கம்.

இதன் கோரிக்கைகள் உண்மையானவை” என்றார்.

3

கருத்துக்கள்