தூத்துக்குடி அருகே வீட்டின் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய பெண்ணிடம் நள்ளிரவில் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற காற்றாலை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பொய்தான்.
இவரது மனைவி சோலையம்மாள் (50).
கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வெயிலின் தாக்கம் மற்றும் காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம வாலிபர் ஒருவர், தூக்கத்தில் இருந்த சோலையம்மாளின் கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சோலையம்மாள் கூச்சலிடவே, சத்தம் கேட்டுத் திரண்ட குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அந்த வாலிபரைத் துரத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்துச் சோலையம்மாள் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகையைப் பறித்துச் சென்றது தஞ்சாவூர் மாவட்டம் ஓமத்தநாடு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விவேக் (23) என்பது தெரியவந்தது.
திருமணமாகாத இவர், தட்டப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டு, அப்பகுதியிலேயே தங்கியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு நடுவக்குறிச்சி கிராமத்திற்குள் வந்த விவேக், காற்றோட்டத்திற்காகக் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய வீடுகளைக் குறிவைத்துத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் சோலையம்மாள் வீட்டிற்குள் புகுந்து சங்கிலியைப் பறித்துச் சென்றது சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து விவேக்கைப் பிடிக்கத் தட்டப்பாறை பகுதிக்குச் சென்ற காவல்துறையினருக்கு, அவர் தனது சொந்த ஊரான ஓரத்தநாட்டிற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாகத் தஞ்சாவூர் விரைந்த புதியம்புத்தூர் காவல்துறையினர், அங்கு மறைந்திருந்த விவேக்கை அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்