தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) என்ற இளைஞர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவல் நிலையத்தில் வைத்து திடீரென உடல்நலக்குறைவு (வலிப்பு) ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக் குற்றஞ்சாட்டி, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு முன்னிலையில் இன்று காலை அருணாச்சலத்தின் உடற்கூறாய்வு தொடங்கியது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் செயல்முறை முழுவதும் முறைப்படி வீடியோ பதிவு செய்யப்பட்டது.
உடற்கூறாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, "இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அருணாச்சலத்தின் குடும்பத்தினரிடம் நீதிபதி உறுதியளித்தார்.
நீதிபதியின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர், அருணாச்சலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கருத்துக்கள்