News & Ad contact: 75025 54555
மன அமைதி தான் முக்கியம்... அமெரிக்காவில் சொந்த வீடு, கோடியில் சம்பளம் : உதறித் தள்ளிய ஐஐடி பட்டதாரி இளைஞர் :
வாழ்க்கையில் ஒருமுறை செட்டில் ஆகிவிட்டால் போதும் என்று பலரும் வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் இன்றைய சூழலில், அங்கிருந்த சொகுசு வாழ்க்கையை ஒரு நொடியில் உதறித் தள்ளிய ஐஐடி பட்டதாரி ஒருவரின் கதை தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவின் 'ஃபர்ஸ்ட் ரிபப்ளிக்' வங்கியில் உயரிய பொறுப்பில் பணியாற்றி வந்த முப்பத்தியெட்டு வயது இளைஞர், தனது பல கோடி ரூபாய் வருமானம் மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட பங்களா என அனைத்தையும் விற்றுவிட்டுத் தற்போது தனது குடும்பத்துடன் உலகைச் சுற்றி வருகிறார்.
பதவி உயர்வு மற்றும் அலுவலக வேலைகளுக்கு இடையே இயந்திரத்தனமாக வாழ்ந்ததில் தனது சுயத்தை இழந்துவிட்டதாக அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த இளைஞர் தனது மனைவியுடன் இணைந்து இதுவரை முப்பத்தியைந்து நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.
தனது பயணத்தின் போது சந்தித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு சமூகப் பணியாளரையே அவர் மனதாரக் காதலித்து மணந்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வியப்பு என்னவென்றால், இவர்களுக்கு என்று தற்போது சொந்தமாக வீடோ அல்லது காரோ கிடையாது.
செல்லும் இடமெல்லாம் எளிய தங்கும் விடுதிகளில் தங்கி, அந்தந்த நாட்டு கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு மிக எளிமையான வாழ்க்கையைத் தங்களது விருப்பப்படி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது குழந்தைகள் வழக்கமான பள்ளிகளுக்குச் செல்லாமல், வீட்டிலேயே தந்தை மற்றும் தாயிடம் கல்வி கற்று வருகின்றனர்.
குறிப்பாக, நவீனக் கல்வியுடன் சேர்த்து வேதம் மற்றும் உபநிடதங்களையும் அந்தக் குழந்தைகள் ஆர்வத்துடன் கற்று வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
"சொத்து சுகத்தை விட மன அமைதியும், குடும்பத்துடன் செலவிடும் நேரமுமே மிக முக்கியம்" என்று இந்தத் தம்பதியினர் கூறும் கருத்து, இன்றைய ஓட்டப்பந்தய வாழ்க்கையில் சிக்கியுள்ள பலருக்கும் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-