News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
அல்வா பிரியர்களுக்குப் பேரிடி : திருநெல்வேலி அல்வா தயாரிப்பு நிறுத்தம் :

உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு இப்போது சர்வதேச அரசியல் காரணமாக ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் நேரடிப் பாதிப்பாக நெல்லையின் அடையாளமாகத் திகழும் சாந்தி இனிப்பகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் அல்வா தயாரிக்கும் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான கிலோ கணக்கில் இனிப்புகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள், எரிபொருள் கிடைக்காமல் அடுப்புகளை அணைத்து வைத்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், இனிப்புத் தயாரிப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடைகளில் காலையிலேயே அல்வா மணம் வீசுவதற்குப் பதிலாக இப்போது அமைதி நிலவுகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் முடக்கத்தினால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

போர் எப்போது முடிவுக்கு வரும் அல்லது எரிவாயு விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்து அதிகாரிகளிடம் முறையான பதில் இல்லாதது வணிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கையிருப்பில் உள்ள உருளைகளைக் கொண்டு ஒரு சில கடைகள் இயங்கினாலும், ஒட்டுமொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் அல்வாவிற்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழக அரசு தலையிட்டு வணிகர்களுக்குத் தேவையான எரிவாயு உருளைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக உள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad